சமூக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பஞ்சமசாலி மடாதிபதி அதிருப்தி
சமூக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பஞ்சமசாலி மடாதிபதி அதிருப்தி
ADDED : ஆக 17, 2024 11:16 PM

பெலகாவி: “பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு கேட்டு, அரசுக்கு காங்கிரசில் உள்ள பஞ்சமசாலி சமூக எம்.எல்.ஏ.,க்கள் குரல் எழுப்பவில்லை,” என, மடாதிபதி பசவ மிருத்யுஞ்ஜெய சுவாமி அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.
முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு கேட்டு, மடாதிபதி பசவ மிருத்யுஞ்ஜெய சுவாமி தலைமையில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. ஆட்சிக் காலத்தின் முடிவில் 2டி இட ஒதுக்கீடு கிடைத்தது. இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2ஏ இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, காங்கிரஸ் உறுதி அளித்தது.
இதனால் காங்கிரசை பஞ்சமசாலி சமூகத்தினர் முழுமையாக ஆதரித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், 2ஏ இட ஒதுக்கீடு குறித்து முதல்வரோ, அமைச்சர்களோ பேச மறுக்கின்றனர்.
மடாதிபதி பசவ மிருத்யுஞ்ஜெய சுவாமி, பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு கிடைக்காதபோது, நமது சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். ஆனால் இப்போது இட ஒதுக்கீடு பற்றி வாய் திறப்பதில்லை.
நான் மடாதிபதியாக இருந்தாலும், இட ஒதுக்கீடு விஷயத்தில் எம்.எல்.ஏ.,க்களை வீடு தேடிச் சென்று பார்த்தேன். ஆனால் சட்டசபை கூட்டத்தொடரின்போது இடஒதுக்கீடு குறித்து எம்.எல்.ஏ.,க்கள் குரல் எழுப்பவில்லை. முதல்வருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் அரசை கண்டித்து, அடுத்த மாதம் 15ம் தேதி, பெலகாவியில் கூட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

