ADDED : ஆக 13, 2024 07:17 AM
பெங்களூரு: சுதந்திர தின நாளை, கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதை கைவிடும்படி, தனியார் கல்வி நிறுவனங்களை பெற்றோர் சங்க ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், பழங்குடியினர் நலனுக்காக செயல்படும் வால்மீகி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், கல்வித் துறையிலும் ஊழல் தாண்டவமாடுவதாக தனியார் கல்வி நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி உள்ளன. கல்வித் துறையில் அதிகரித்துள்ள ஊழல்களை கண்டித்து, வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை, கருப்பு தினமாக அனுசரிக்க தனியார் கல்லுாரி மற்றும் பள்ளிகளைச் கல்வி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அன்றைய தினம் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் கையில், 'கருப்பு ரிப்பன்' கட்டி, எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானித்துள்ளனர்.
அதே நேரம், 'சுதந்திர தினத்தின் மகத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதால், அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டாம்' என, பெற்றோர் சங்க ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், 'ஊழல் பிரச்னைக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா, தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தீர்வு காண வேண்டும்' என்றும் அக்குழு வலியுறுத்தி உள்ளது.

