ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலைத்துள்ளது! தேவகவுடா பெருமிதம்
ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலைத்துள்ளது! தேவகவுடா பெருமிதம்
ADDED : செப் 01, 2024 03:31 AM

ஹாசன் : ''ஜம்மு - காஷ்மீரில் நிம்மதி நிலைத்துள்ளது. இங்கு 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறைந்துள்ளது. மக்கள் நிம்மதியாக நடமாடுகின்றனர்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார்.
ஹாசன், ஹொளே நரசிபுராவின் மாவினகெரே மலையில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலுக்கு, தேவகவுடா நேற்று வருகை தந்தார். தரினம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜம்மு - காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்த பின், பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறைந்துள்ளது. பொதுமக்கள் நிம்மதியுடன் நடமாடுகின்றனர். அங்கு அமைதி நிலைத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் தற்போது தேர்தல் நடக்கிறது. மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுவர் என்பதை கணிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி நற்பணிகளை செய்துள்ளார். தங்களுக்கு நிம்மதி அளித்தவருக்கு மக்கள் ஓட்டுப் போடுவர்.
தற்போது ஜம்மு - காஷ்மீருக்கு, அதிகமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இங்கு மோடியும், அமித் ஷாவும் பயங்கரவாதத்தை ஒடுக்கி உள்ளனர்.
காஷ்மீரில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு, 230 படிகள் உள்ளன. நான், 30 படிகள் வரை ஏறினேன். அதன்பின் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அழைத்துச் சென்றனர். கிருஷ்ணர் கோவிலுக்கும் சென்றிருந்தேன்; தரிசனம் செய்தேன்.
கர்நாடகாவில் நடக்கும், அரசியல் நிலவரங்களை பற்றி, நேரம் வரும்போது பேசுகிறேன். எனக்கு இன்னும் சக்தி உள்ளது. ஹாசனுக்கு வருவேன். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வேன்.
மூட்டு வலியை தவிர, வேறு எந்த உடல் ஆரோக்கிய பிரச்னையும் எனக்கு இல்லை. ரங்கநாதர் ஆசியால், இன்னும் சில ஆண்டுகள் அரசியலில் இருப்பேன்.
காங்கிரசார் நடத்தும் 'ராஜ்பவன் சலோ' விஷயமாக, நான் இப்போது எதுவும் பேசமாட்டேன். பேசும் காலம் வரும். அப்போது பேசுவேன்.
இவ்வாறு அவர்கூறினார்.