அணையில் 'போட்டோ ஷூட்' அதிகாரிகள் மீது மக்கள் கோபம்
அணையில் 'போட்டோ ஷூட்' அதிகாரிகள் மீது மக்கள் கோபம்
ADDED : செப் 07, 2024 07:34 AM

கொப்பால்: ஷட்டர் உடைந்த துங்கபத்ரா அணையில், இளம் ஜோடி திருமண 'போட்டோ ஷூட்' நடத்தியது. இதனால் அதிகாரிகள் மீது மக்கள், கடும் கோபம் அடைந்துள்ளனர்.
கொப்பால் - விஜயநகரா மாவட்ட எல்லையில் முனிராபாத் என்ற இடத்தில் உள்ளது துங்கபத்ரா அணை. கடந்த மாதம் 12ம் தேதி இரவு, அணையின் 19வது மதகின் ஷட்டரை தாங்கிப் பிடிக்கும், இரும்பு சங்கிலி அறுந்து, தண்ணீரில் ஷட்டர் அடித்துச் செல்லப்பட்டது.
உடைந்த ஷட்டர் வழியாக அதிக தண்ணீர் வெளியேறியதால், அணையின் பாதுகாப்பு கருதி, மேலும் சில ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறு நாட்களில் 35 டி.எம்.சி., தண்ணீர் அணையில் இருந்து வெளியே சென்றது.
இதனால் கொப்பால், விஜயநகரா, பல்லாரி, ராய்ச்சூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்தனர். ஆறு நாட்கள் கடும் முயற்சிக்குப் பின், தற்காலிக ஷட்டர் பொருத்தப்பட்டது.
கடந்த சில தினங்களாக, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், துங்கபத்ரா அணை நீர்மட்டம் மீண்டும் உயர ஆரம்பித்தது. இந்நிலையில் அணையில் மேல் உள்ள நடைபாதை பகுதிக்குச் செல்வதற்கு மக்களுக்கு அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். ஆனால் அணையில் மேல் உள்ள நடைபாதையில், இளம்ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த புகைப்படங்கள் வேகமாக பரவின. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சாதாரண மக்களுக்கு தடை விதித்து விட்டு, பணம் வாங்கிக் கொண்டு, போட்டோ ஷூட் நடத்த அனுமதி அளித்ததாக, அதிகாரிகள் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர். போட்டோ ஷூட் நடத்திய, இளம்ஜோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது.