ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்
ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்
ADDED : செப் 07, 2024 07:46 AM

ஹாசன்: ஏழு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கிவைத்தார்.
கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய ஏழு மாவட்டங்களில், குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2014ல் எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.
ஹாசனின் சக்லேஷ்பூரில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் பதித்து, மற்ற மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
ஏழு மாவட்டங்களில் உள்ள 6,657 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்தன.
தற்போது முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன. ஹாசனின் சக்லேஷ்பூர் பைக்கரே பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
எத்தினஹொலே குடிநீர்த் திட்டப் பணிகள், இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. 2027ம் ஆண்டு இரண்டாவது கட்ட பணிகளும் நிறைவடையும். இந்தத் திட்டம் வாயிலாக ஏழு மாவட்டத்தில் உள்ள, லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை பற்றி சிலர், மக்கள் கண்முன் பொய் பேசுவர். திட்டத்தை தவறாக சித்தரிப்பர். அவர்களை யாரும் நம்ப வேண்டாம். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, எத்தினஹொலே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது பணிகளை துவக்கி வைத்து உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.