ரேபரேலியில் ராகுல் போட்டி: வயநாடு மக்கள் ஏமாற்றம்
ரேபரேலியில் ராகுல் போட்டி: வயநாடு மக்கள் ஏமாற்றம்
ADDED : மே 04, 2024 11:46 PM

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், உத்தர பிரதேசதத்தில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கு வயநாடு தொகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார்.
தற்போது நடக்கும் தேர்தலில் அவர் வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம், 26ல் அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா, பா.ஜ.,வின் மாநிலத் தலைவர் சுரேந்திரன் அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.
அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும்படி, கட்சித் தலைமை வலியுறுத்திய நிலையில், தன் தாய் சோனியாவின் ரேபரேலியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாவது தொகுதி யில் அவர் போட்டியிடுவது குறித்து, வயநாடு தொகுதி வாக்காளர்கள், கலவையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு சாரார், அது தவறில்லை என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இரண்டிலும் வென்றால், வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்வார் என்றும், அது சரியல்ல என்றும் தொகுதி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கேரளாவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குஞ்சாலிகுட்டி, இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
“பிரதமர் மோடி கூட முதல் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, இண்டியா கூட்டணிக்கு வலு சேர்க்கும்,” என, அவர் கூறியுள்ளார்.