மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: காங்கிரஸ் கணிப்பு
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: காங்கிரஸ் கணிப்பு
ADDED : மே 15, 2024 03:58 PM

புதுடில்லி: மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். இதுவரை 4 கட்டங்களாக, 379 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது.
மக்கள் கோபம்
பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசும் வார்த்தைகளே சர்ச்சைக்குரியதாக உள்ளன. பா.ஜ.,வினரின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. அரசின் மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வேறு எதுவும் இல்லை
ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது எனது தீர்மானம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரசாரம் முழுவதும் பிரதமரின் பேச்சில் ஹிந்து, முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு எதுவும் இடம் பெறவில்லை. அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டு, நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடைசி முயற்சி என்பது காங்கிரஸ் கட்சியைப் பற்றி பொய்யுரைப்பது தான். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
