ஹம்பி நினைவு சின்னங்கள் பாதுகாக்க மக்கள் விருப்பம்
ஹம்பி நினைவு சின்னங்கள் பாதுகாக்க மக்கள் விருப்பம்
ADDED : மே 28, 2024 06:29 AM

விஜயநகரா: 'வருங்கால சந்ததியினருக்காக, யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஹம்பி சின்னங்களை பாதுகாக்க வேண்டும்' என சுற்றுலா பயணியர் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
விஜயநகரா மாவட்டம், ஹம்பி நினைவு சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இவைகள் வெயில், மழை, காற்றால் வடிவத்தை இழந்து வருகின்றன.
இங்குள்ள விருபாக் ஷப்பா ரத கோவிலுக்கு செல்லும் வழியில் 16 துாண் மண்டபம் உள்ளது. இம்மாதம் பெய்த தொடர் மழையால், இம்மண்டபத்தின் எட்டு துாண்கள் இடிந்து விழுந்தன. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுபோன்று கிருஷ்ண பஜார் சாலு மண்டபம், அச்யுத் கோவில் கல்யாண மண்டபம், தண்டநாயகர் வளாகத்தில் உள்ள கோட்டை, ராமர் கோவில் முன்புறம் உள்ள கல் மண்படங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நினைவு சின்னங்கள் இடிக்கப்படுவதற்கு முன், மத்திய, மாநில தொல்லியல் துறையினர், திட்டம் தயாரித்து, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல தரப்பினரும் விருப்பப்படுகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் ஹம்பிக்கு வருகின்றனர். ஹம்பி உற்சவம், திருவிழா, பால பூஜை போன்ற நேரங்களில், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் பழங்கால மண்டபங்களில் தஞ்சம் அடைவது வழக்கம். அப்போது நினைவு சின்னங்கள் இடிந்து விழுந்தால், என்னவாகும் என்று சுற்றுலா துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் நிஹில் தாஸ் கூறுகையில், ''இதுபோன்ற நினைவு சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக சீரமைக்கப்படும்,'' என்றார்.