மேகதாது அணை கட்ட அனுமதி: மோடியிடம் சிவகுமார் கோரிக்கை
மேகதாது அணை கட்ட அனுமதி: மோடியிடம் சிவகுமார் கோரிக்கை
ADDED : ஆக 01, 2024 12:44 AM

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில், கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், கர்நாடகா -- தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையில், பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2013- - 2018 காங்கிரஸ் ஆட்சியில் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்த சிவகுமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.
தமிழகம் எதிர்ப்பு
'மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது' என்று கூறி, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால் அணை கட்டுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, மேகதாது சங்கமாவில் இருந்து பெங்களூரு வரை காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று, கர்நாடக பா.ஜ., குற்றம் சாட்டியது. மத்திய அரசு அனுமதி அளித்தால் அணை கட்ட தயார் என காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வரும், நீர்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, 'நெருக்கடியான காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் பிரச்னையை பூர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்துள்ளோம்.
'அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது' என்று பிரதமர் மோடியிடம், சிவகுமார் கூறியுள்ளார்.
அப்போது பிரதமர், 'கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாமே' என்று கூறி இருக்கிறார். ஆனாலும், 'மத்திய அரசு தலையிடும் வரை, மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது கடினமான விஷயம்' என்று பிரதமரிடம், சிவகுமார் கூறியுள்ளார். இந்த கோரிக்கை பற்றி பரிசீலனை செய்வதாக சிவகுமாரிடம், பிரதமர் மோடி உறுதியளித்ததாக தெரிகிறது.
பின், மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல், இணை அமைச்சர் சோமண்ணா ஆகியோரையும் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி, சிவகுமார் கேட்டு கொண்டார்.
பின், டில்லியில் உள்ள கர்நாடக பவனில் சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக, 'கிப்ட் சிட்டி' உருவாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் நாட்டில் ஒரே ஒரு கிப்ட் சிட்டி தான் உருவாக்க முடியும் என்று, பிரதமர் கூறினார்.
இதனால் பெங்களூரு நகரில் சுரங்கபாதை, சிக்னல் இல்லா சாலைகள், முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், மழைநீர் வடிகால்களை மேம்படுத்தவும், நீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும் அவரிடம் கோரிக்கை வைத்தேன்.
தேசிய கருவூலத்திற்கு பெங்களூரு அதிக வரி செலுத்துகிறது. ஆனால் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெங்களூருக்காக எதுவும் நிதி கிடைக்கவில்லை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எலக்ட்ரானிக் சிட்டி, ஹெப்பால், நெலமங்களா பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்தது.
மகதாயி விவகாரம்
பெங்களூரில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் பல திட்டங்களுக்கு, மத்திய அரசின் உதவி கேட்டுள்ளோம். பெங்களூரு நகருக்கு சிறந்த உள்கட்டமைப்பு தேவை என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
பத்ரா மேல் அணை திட்டத்திற்கு முந்தைய பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணம் வரவில்லை என்று பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதுகுறித்து பரிந்துரைப்பதாக, பிரதமர் கூறினார்.
ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது பற்றியும், மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
மகதாயி நதிநீர் பிரச்னையில் தலையிடும்படி, பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அவர் கர்நாடகா- - கோவா மாநிலங்கள் அமர்ந்து பேசி பிரச்னையை தீர்க்க பரிந்துரைத்தார். ஆனாலும், மத்திய அரசின் மத்தியஸ்தம் தேவை என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர் --