ADDED : ஆக 22, 2024 12:57 AM
கொச்சி,மனைவியின் கோரிக்கையை ஏற்று, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவரின் விந்துவை சேகரிக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
தன் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில், செயற்கை கருத்தரிப்பு முறை வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக, அவருடைய விந்துவை சேகரிக்க அவர் அனுமதி கோரினார்.
இதை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண் அதற்கு அனுமதி அளித்துள்ளார். உத்தரவில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் செயற்கை கருத்தரிப்பு முறை வாயிலாக குழந்தையை பெற்றுக்கொள்ள மனைவி விரும்பியுள்ளார்.
அதனால், உடனடியாக கணவரின் விந்துவை சேகரித்து, பாதுகாத்து வைக்க அனுமதி கோரியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கணவரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கணவரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உடனடியாக இதற்கு அனுமதி கேட்டுள்ளார். அது ஏற்கப்படுகிறது. அவர் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை, கணவரின் விந்துவை சேகரித்து, பாதுகாத்து வைக்கலாம்.
அதே நேரத்தில் செயற்கை கருத்தரிப்பு முறை வாயிலாக அடுத்தகட்ட நடவடிக்கையை, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை, செப்., 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.