அரசு நிலங்களில் வழிபாட்டு தலங்கள்: அகற்றுவதற்கு கேரளா கோர்ட் உத்தரவு
அரசு நிலங்களில் வழிபாட்டு தலங்கள்: அகற்றுவதற்கு கேரளா கோர்ட் உத்தரவு
ADDED : மே 31, 2024 06:27 AM

கொச்சி: 'அரசு நிலங்களில், அனுமதியில்லாத, சட்டவிரோதமான வழிபாட்டு தலங்கள் இருக்கக் கூடாது. அவற்றை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா தோட்டத் தொழில் வாரியம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி
பத்தனம்திட்டா பகுதியில் அரசு குத்தகைக்கு கொடுத்துள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
தோட்ட தொழில் வளர்சிக்காக நிலங்களை அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கென குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், பல மதங்களின் வழிபாட்டு தலங்களும் இந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தொழிலாளர்களுக்கு இடையே பல முறை மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அனுமதியில்லாத வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடவுள் எங்கும் நிறைந்துள்ளார்; அனைத்திலும் நிறைந்துள்ளார். அதனால் இதை வைத்து, அரசு நிலங்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு தலங்களை அமைக்கக் கூடாது.
அவற்றை, ஏழை எளிய மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு பிரித்து தர வேண்டும். அவ்வாறு செய்தால், அனைத்து கடவுள்களும் மகிழ்ச்சி அடைவர். கேரளா ஒரு சிறிய மாநிலம்.
இங்கு நுாற்றுக்கணக்கான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்ளன. கடவுளின் நாடு என்றழைக்கப்படும் இங்கு, மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது. அதனால், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது.
அறிக்கை தாக்கல்
இந்த நிலம் மட்டுமல்லாமல், மாநிலம் முழுதும் உள்ள அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, கலெக்டர்கள் வாயிலாக, ஆறு மாதங்களுக்குள், தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில் உள்ள சட்டவிரோத வழிபாட்டு தலங்களை, அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுதும் அகற்ற வேண்டும். ஓராண்டுக்குப் பின், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.