காஞ்சியில் தயாரித்த இருமல் மருந்து குடித்து ம.பி., ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு கடிதம்
காஞ்சியில் தயாரித்த இருமல் மருந்து குடித்து ம.பி., ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு கடிதம்
ADDED : அக் 02, 2025 10:37 PM

சென்னை : 'இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்திருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு, மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதி உள்ளார்.
சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், ராஜஸ்தான் சீக்கர் மாவட்டத்தில், இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகளும், ராஜஸ்தானில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.
இதையடுத்து, மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள், குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என, தெரியவந்துள்ளது. மேலும், அந்த இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் தினேஷ்குமார் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 'சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு கம்பெனி, உங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பதால், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.