தயவு செய்து நிதி ஒதுக்குங்கள் காங்.,- - எம்.எல்.ஏ.,க்கள் கெஞ்சல்
தயவு செய்து நிதி ஒதுக்குங்கள் காங்.,- - எம்.எல்.ஏ.,க்கள் கெஞ்சல்
ADDED : ஜூலை 20, 2024 06:39 AM
பெங்களூரு: 'எங்கள் தொகுதிக்கு தயவு செய்து நிதி ஒதுக்குங்கள்' என்று, முதல்வர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கெஞ்சியுள்ளனர்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரை ஒட்டி, பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, 'மூடா'வில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, தகுந்த பதிலடி கொடுப்பது பற்றி, எம்.எல்.ஏ.,க்களிடம், முதல்வர் எடுத்துக் கூறியுள்ளார்.
'மூடா வழக்கில் எனக்கு எதிராக சதி நடக்கிறது. இனியும் அமைதியாக இருந்தால் சரிபடாது. சட்டசபையில் நாம் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்' என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.பின், எம்.எல்.ஏ.,க்களிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. இதனால் தொகுதி பக்கம் தலை காட்டவும், மக்களை சந்திக்கவும் பயமாக உள்ளது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எங்கள் தொகுதிகளுக்கு தயவு செய்து நிதி ஒதுக்குங்கள்.
'அதிகாரிகளை இடமாற்றும் விஷயத்தில் அமைச்சர்களிடம் இருந்து எங்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை' என்றும் தங்கள்ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.
கூடிய விரைவில் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னைகளை தீர்க்கும்படி அமைச்சர்களுக்கு உத்தரவிடுவதாகவும், முதல்வர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.