ADDED : பிப் 26, 2025 12:16 AM

பெலகாவி; கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட காரணமான, அரசு பஸ் நடத்துனர் மீதான, 'போக்சோ' புகாரை வாபஸ் பெறுவதாக, மராத்தி குடும்பம் அறிவித்து உள்ளது.
பெலகாவி டவுனில் இருந்து ரூரல் பகுதியான பாலேகுந்த்ரி என்ற இடத்திற்கு, கடந்த 21ம் தேதி கர்நாடக அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நடத்துனராக பணியாற்றிய மஹாதேவப்பா, 51 என்பவர், மராத்தி மொழி பேசும் இளம்பெண்ணுக்கு டிக்கெட் கொடுத்தார். அப்போது அந்த இளம்பெண் மராத்தியில் ஏதோ கூற, மஹாதேவப்பாவுக்கு புரியவில்லை.
கன்னடத்தில் பேசும்படி கூறினார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர் பஸ்சை மறித்து ஏறி, மஹாதேவப்பாவை தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரில், நான்கு மராத்தி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கருப்பு மை
நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, கடந்த 21ம் தேதி இரவே பெலகாவியில் இருந்து மஹாராஷ்டிரா சென்ற அம்மாநில அரசு பஸ் மீது, கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசினர். பதிலுக்கு கோலாப்பூரில் இருந்து பெலகாவி வந்த கர்நாடக அரசு பஸ் மீது, மராத்தி அமைப்பினர் கருப்பு மை பூசினர்.
இதற்கிடையில் இளம்பெண் அளித்த புகாரில், நடத்துனர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தால், நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கன்னட அமைப்பினர் குற்றச்சாட்டு கூறினர்.
இரு மாநிலங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணியர் அவதி அடைந்தனர். போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி, பெலகாவிக்கு சென்று நடத்துனருக்கு ஆறுதல் கூறினார். போலீசார் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தார். ரக் ஷன வேதிகே கன்னட அமைப்பினரும், பெலகாவியில் நேற்று போராட்டம் நடத்தினர்.
கன்னட அபிமானி
இந்நிலையில் நடத்துனர் மீது போக்சோ புகார் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்தினர் நேற்று ஒரு வீடியோ பேசி வெளியிட்டனர். 'எங்கள் மகள் பெலகாவியில் இருந்து பாலேகுந்திரிக்கு பஸ்சில் வந்தார். டிக்கெட் எடுப்பதில் நடத்துனர், எங்கள் மகள் இடையில் சண்டை ஏற்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையாக மாறும் என்று நினைக்கவில்லை. நாங்கள் மராத்தியர்கள் என்றாலும், பல ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். நாங்களும் கன்னட அபிமானிகளே.
'எங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடு இல்லை. இந்த பிரச்னையால் மகளின் எதிர்காலமும் பாதிக்கும் என்று நினைக்கிறோம். இதனால் நடத்துனர் மீது கொடுத்த, போக்சோ புகாரை வாபஸ் பெறுகிறோம். பிரச்னையை இத்துடன் நிறுத்த வேண்டும். நாங்களாக முன்வந்து வழக்கை வாபஸ் பெறுகிறோம். யாருடைய அழுத்தமும் இல்லை' என்று கூறி இருந்தனர்.
பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் யடா மார்டின் மர்பன்யாங் கூறுகையில், ''புகார்தாரர் குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டு, நடத்துனர் மஹாதேவப்பா மீதான போக்சோ வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி உள்ளனர். அந்த வீடியோவை விசாரணையின் ஆதாரமாக எடுத்து கொள்வோம்.
''நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்த, மாரிஹால் இன்ஸ்பெக்டரை பணியிட மாற்றம் செய்தோம். வழக்கை உதவி போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தோம். யாருடைய அழுத்தத்தில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.