ADDED : பிப் 28, 2025 10:59 PM
ஷிவமொக்கா: ஆடு மேய்க்கும் பெண்ணை, நிர்வாணமாக்கி தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஷிவமொக்கா, ஷிகாரிபுராவின் சிக்கஜோகி ஹள்ளி கிராமத்தில் 50 வயது பெண் வசிக்கிறார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் வேலை செய்கிறார். இவர், இதே கிராமத்தின் அருகில் உள்ள, ஈசூர் கிராமத்தில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம்.
பிப்ரவரி 23ம் தேதி, கிராமத்தின் தோட்டம் அருகில் ஆடுகளை மேய விட்டிருந்தார். அப்போது சில ஆடுகள், தோட்டத்தில் நுழைந்து செடிகளின் இலைகளை தின்றன. இதனால் கோபமடைந்த தோட்ட உரிமையாளர் ராமேனஹள்ளி சிவகுமாரும், அவரது மகன் அருணும் ஆடு மேய்க்கும் அப்பெண்ணை கடுமையாக தாக்கினர். நிர்வாணமாக்கினர். மரத்தில் கட்டிப்போட முயற்சித்தனர்.
அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த அப்பகுதியினர், அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற பின், அவர் வீடு திரும்பினார்.
ஷிகாரிபுரா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவலறிந்த தலித் அமைப்பினர் தலையிட்ட பின், வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவானதும், சிவகுமாரும், அருணும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.