ADDED : மார் 22, 2024 05:50 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்காக பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். ரவுடிகளை கண்காணிக்கின்றனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்.
பெங்களூரு தெற்கு மண்டல போலீசார், நேற்று அதிகாலை 234 ரவுடிகளின் வீடுகளில், சோதனை நடத்தினர்; சில ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சோதனை நடந்த போது, சில வீடுகளில் ரவுடிகள் இருக்கவில்லை.
இருந்தவர்களை வெளியே அழைத்து வந்த போலீசார், ஓட்டுப்பதிவு நாள் நெருங்குகிறது. 'யாரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட கூடாது. அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டும். சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. ஒருவேளை ஏற்படுத்தினால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரவுடிகளை எச்சரித்தனர்.
அதிகாலை திடீரென போலீசார், ரவுடிகளின் வீட்டு கதவை தட்டியதால், இவர்களின் குடும்பத்தினரும், அக்கம், பக்கத்தினரும் வெலவெலத்தனர். காலை 8:00 மணி வரை சோதனை நடந்தது.

