மாயமான மணப்பெண்; இறந்ததாக தகவல் பரவியதால் போலீசார் அதிர்ச்சி
மாயமான மணப்பெண்; இறந்ததாக தகவல் பரவியதால் போலீசார் அதிர்ச்சி
ADDED : பிப் 22, 2025 01:23 AM
முசாபர் நகர்: மணப்பெண் மாயமானதை அடுத்து, அவர் இறந்ததாகவும், கடத்தப்பட்டதாகவும், மணமகன் குடும்பத்தினர் செய்தி பரப்ப, உண்மை தெரியாமல் போலீசார் திணறிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது.
உத்தர பிரதேச முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சுஷ்மனா சர்மா. இவருக்கும், பரத் பூஷன் என்பவருக்கும், கடந்த 19ம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
புகார்
முந்தைய நாளான 18ம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, அலங்காரம் செய்ய பியூட்டி பார்லருக்கு சென்ற சுஷ்மனா சர்மா வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். சுஷ்மனா குறித்த தகவல் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர் மாயமானதாக போலீசில் புகாரளித்தனர்.
இதற்கிடையே, பெண் காணாமல் போனதால் திருமணம் நின்றது. இது பற்றி வெளியே தெரிவித்தால் அவமானமாக இருக்கும் என எண்ணிய பரத் பூஷன் பெற்றோர், மணப்பெண் மாரடைப்பால் இறந்ததால் திருமணம் நின்றது என உறவினர்களிடம் தெரிவித்தனர்.
கடத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவியது. சுஷ்மனா காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து தேடி வந்த போலீசாருக்கு, அவர் மாரடைப்பால் இறந்ததாக செய்தி பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணை
உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்த போலீசார் மணமகள் - மணமகன் வீட்டாரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாயமான சுஷ்மனா, மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஒரு வீட்டில் போலீசாரால் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டார்.
விசாரணையில், பரத்துடனான திருமணம் பிடிக்காமல், தோழி ஒருவரின் உதவியுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறியது தெரியவந்தது.
இதையடுத்து, பெற்றோரிடம் சுஷ்மனா ஒப்படைக்கப்பட்டார். இறந்ததாக தகவல் பரப்பிய பரத் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

