நாட்டுக்கோட்டை நகரத்தார் காசியில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரம்: திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
நாட்டுக்கோட்டை நகரத்தார் காசியில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரம்: திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
UPDATED : அக் 31, 2025 08:24 PM
ADDED : அக் 31, 2025 07:58 PM

வாரணாசி:  உத்தர பிரதேசத்தின் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார், ரூ.60 கோடி செலவில் கட்டிய 10 மாடி  தர்ம சத்திரத்தை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மகத்தான மாற்றம்
 
நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் காசியில் கட்டிய 10 மாடி தர்மசத்திரம் திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாக தான் இந்த பிரம்மாண்ட கட்டடம் இந்த இடத்தில்  எழுப்பி உள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தை கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதை தான் இது காட்டுகிறது. 2020 ல் எம்பியாக காசிக்கு வந்தேன்.
பிரதமர் மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில்  ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், 'இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை' என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது.  இதற்கு பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.
பெருமை 
 
ரூ.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை.  நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டடத்தை கலாசார பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமரின் முயற்சி 
 
சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
நோக்கம் 
 
நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் 1863 ம் ஆண்டு துவங்கப்பட்டதாக அறிகிறேன். அப்படி பழமையான காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்திரம், தமிழகத்தில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவதே நோக்கம் . நேற்றைக்கும் சரி,  இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி அதுவே நோக்கம்.
ஜார்க்கண்ட் கவர்னராக நான் காசிக்கு வந்த போது நம்முடைய நகரத்தார் சங்கத்தில் இருந்து தான்  தினமும் பூஜைப் பொருட்கள் காசி கோவிலுக்கு எடுத்து செல்வது வழக்கம் என்பதை முதல்வர் யோகி குறிப்பிட்டார். அதில் நானும் கவர்னராக நடந்து சென்று இறைவனை வழிபடும் வாய்ப்பை நகரத்தார் வழங்கினார்.
பூஜை பொருட்களை எடுத்து செல்லும்  போது வழியில் நிற்பவர்கள், ' சம்போ சம்போ சங்கர  மஹாதேவா என்று ஒலிப்பதை கேட்க முடிகிறது. அதனால் இந்த வழக்கத்தை சம்போ என அழைக்கின்றனர்.இதில் ஒரு ஆச்சர்யம், 1942 ல்  அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேயே அரசு கூட 'சம்போ' நிகழ்ச்சியை தடை செய்யவில்லை.
அந்த இரண்டு கர்மயோகிகள் பொறுப்பேற்று கொண்ட பிறகு காசி தெருக்களில் ஹரஹர மகாதேவா  கோஷம் முன்பை விட பெருமையாகவும் சுதந்திரமாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆக்கிரமிப்பு
 
நகரத்தார்  தர்ம சத்திரம் கட்டியுள்ள இடம் சமாஜ்வாதி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. பாஜ அரசு  உபி மாநிலத்தில் அமைந்த பிறகு அந்த இடம் மீட்கப்பட்டு நகரத்தார் சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் இந்த பிரம்மாண்ட தர்மசத்திரம் கட்டப்பட்டு உள்ளது.

