ADDED : மார் 05, 2025 07:27 AM
கர்நாடக தொழில், தோட்டக்கலை அமைச்சர்கள் ரெண்டு பேரும், ஒரே சமூகத்தை சேர்ந்தவங்க. ஆனாலும் ரெண்டு பேருக்கும் இடையில நீயா, நானா போட்டி இருந்துச்சு. சில வருஷத்துக்கு முன்னாடி தொழில் அமைச்சர, தன்னோட வீட்டிற்கு தோட்டக் கலை அமைச்சரு விருந்துக்கு அழைச்சாரு.
அங்க வச்சு அவங்க ரெண்டு பேருக்கும் இடையில, பெரிய வாக்குவாதமே ஏற்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சரியா பேசிக்கிறது இல்ல. இந்த நெலமைல சட்டசபை கூட்டத்தொடர்ல இரண்டு அமைச்சர்களும் அருகருகே உட்கார்ந்து இருந்தாங்க.
எதிர்க்கட்சிகாரங்க கேட்ட கேள்விக்கு தொழில் அமைச்சர் பதில் அளிக்கும்போது சற்று தடுமாற, தோட்டக்கலை அமைச்சரு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தாரு. இருவரும் ஒருத்தர பார்த்து ஒருத்தரு சிரிச்சிக்கிட்டாங்க. இது இப்படியே நீடிக்குமா?
தாமரை கட்சி எம்.எல்.சி.,யான தாடிக்காரரு, கைக்கட்சி ஆட்சிய பத்தி குறை சொல்லனும்னா, முதல் ஆளாக வந்துடுவாரு.
ஆனா போன வருஷம் நடந்த கூட்டத்தொடர் அப்போ, பெண் அமைச்சர பாத்து ஆபாச வார்த்த பேசுனாருன்னு தாடிகாரர் மேல குற்றச்சாட்டு எழுந்தது. இத பத்தி போலீஸ் விசாரிச்சிட்டு வர்றாங்க.
இதனால தாடிகாரர்கிட்ட முன்ன இருந்த மாதிரி சுறுசுறுப்பு இல்ல. மேல்சபையில அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிக்காரங்க எதிர்க்கட்சி தலைகட்டுகள் எல்லாம் எழுந்து கேள்வி கேட்கும்போது, தாடிகாரர் மட்டும் நமக்கு ஏன் வம்பு? இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போவோம் என்பது போல அமைதியா உட்கார்ந்து இருந்தாரு.
அப்பப்போ புல்லுக்கட்டு எம்.எல்.சி., ஒருத்தரு கூட மட்டும் பேசிட்டு இருந்தாரு. எப்படி இருந்த மனுஷன் இப்போ இப்படி ஆயிட்டார்னு ஆதரவாளர்கள் பேசுறாங்க.
புல்லுக்கட்டு கட்சியோட மாநிலத் தலைவரான குமரண்ணரு, மத்தியில அமைச்சரா இருக்காரு. இதனால தலைவர் பதவிய தன்னோட தவப்புதல்வன் சினிமாகாரருக்கு கொடுக்க நினைக்குறாரு. ஆனா கட்சியில இருக்குற சில மூத்த தலைக்கட்டுகள், முட்டுக்கட்டையாக இருக்காங்க.
சினிமாகாரரு இதுவரை போட்டியிட்ட மூணு தேர்தல்லயும் தோத்து போனதும் ஒரு காரணமாம். இதனால மகனோட அரசியல் எதிர்காலத்த நினைச்சு, குமரண்ணர் வருத்தத்துல இருக்காரு. மகன எப்படியாவது அரசியல்ல வளர்த்து விட நினைக்குறாரு.
அடுத்த சட்டசபை தேர்தல்ல, தங்கள் கோட்டையான உருளை மாவட்டத்துல உள்ள ஏதாவது ஒரு தொகுதியில இருந்து, மகனை போட்டியிட வைக்க குமரண்ணரு முடிவு பண்ணி இருக்காறாம். ஆனா சினிமாகாரருக்கு அதுல உடன்பாடு இல்லையாம்.