ADDED : மே 12, 2024 09:52 PM
ஹூப்பள்ளி: ''தேவராஜேகவுடா தனக்கு தெரிந்த தகவலை, வெளியே கூறுவார் என்ற பீதியில், அவரை கைது செய்துள்ளனர். எஸ்.ஐ.டி., காங்கிரஸ் அரசின் ஏஜன்ட் போன்று செயல்படுகிறது,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
பா.ஜ., தலைவரும், வக்கீலுமான தேவராஜே கவுடா கைதின் பின்னணியில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. சுயலத்துக்காக அவரை கைது செய்தது, நன்றாக தெரிகிறது.
பென் டிரைவ் விஷயத்தில், துணை முதல்வர் சிவகுமாரின் பங்களிப்பு குறித்து, தேவராஜே கவுடா சாட்சியம் அளித்த பின், அவரை கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் ஹிட்லரை மிஞ்சும் ஆட்சி நடக்கிறது. பெண் கடத்தல் வழக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. ரேவண்ணாவை கைது செய்தது ஏன், பிரஜ்வலை கைது செய்யாமல் விட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்து உள்ளது.
தேவராஜே கவுடா தனக்கு தெரிந்த தகவல்களை, வெளியே கூறக்கூடும் என்ற அச்சத்தில், அவரை கைது செய்துள்ளனர். காங்கிரஸ் அரசின் ஏஜன்ட் போல சிறப்பு புலனாய்வு குழு செயல்படுகிறது.
சிவகுமார் சிக்குவார் என்ற பீதியில், தேவராஜே கவுடாவின் வாயை மூடும் நோக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகுமார் பற்றி பேசினால், ஒடுக்கப்படுகின்றனர். இந்த அரசில் எதுவும் சரியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.