ADDED : ஏப் 28, 2024 12:44 AM

மும்பை,: மஹாராஷ்டிராவின் வடக்கு மத்திய மும்பை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் இரு முறை வென்ற பூனம் மகாஜனுக்கு, 43, இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள 48 லோக்சபா தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இதன்படி, முதல்கட்ட தேர்தலில் ஐந்து தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில் வடக்கு மத்திய மும்பை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மும்பை பயங்கரவாத தாக்குதல், 1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிஹாம், 71, போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது.
முன்னாள் மத்திய அமைச்சர், மறைந்த பிரமோத் மகாஜனின் மகளான பூனம் மகாஜன், கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இவர், அக்கட்சியின் இளைஞரணி முன்னாள் தலைவராகவும் இருந்தார். எனினும், இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் அவர், இத்தொகுதியில் ஏற்கனவே இருமுறை போட்டியிட வாய்ப்பளித்த பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

