ADDED : ஆக 20, 2024 11:43 PM

சிக்பல்லாப்பூர் : சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 39. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ., ஆன பின், தங்களை மதிப்பதில்லை என, சிக்கபல்லாப்பூர் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரதீப் ஈஸ்வர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மாநில தலைவர் சிவகுமாரிடம், பிரதீப் ஈஸ்வர் மீது புகார் கூறினர்.
தற்போது அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது எம்.எல்.ஏ., ஆன பின், கட்சி சார்பில் நடக்கும் போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் பங்கேற்பது இல்லை.
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் உத்தரவிட்டதை கண்டித்து, மாநில முழுதும் நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
சிக்கபல்லாப்பூரில் நடந்த போராட்டத்திலும் பிரதீப் ஈஸ்வர் பங்கேற்கவில்லை. இதை கவனித்த அவரது எதிர்கோஷ்டியினர், ஈஸ்வர் மீது மீண்டும் புகார் பட்டியல் வாசித்துள்ளனர்.
தொண்டர்களும் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு அவர் விளக்கமும் அளிக்கவில்லை.