நித்யானந்தாவுடன் பிரஜ்வல் தொடர்பு: காங்., வேட்பாளர் லட்சுமண் குண்டு
நித்யானந்தாவுடன் பிரஜ்வல் தொடர்பு: காங்., வேட்பாளர் லட்சுமண் குண்டு
UPDATED : மே 12, 2024 11:50 AM
ADDED : மே 12, 2024 01:03 AM

மைசூரு: ''பலாத்கார குற்றத்தை எதிர்கொண்டுள்ள ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவுடன் தொடர்பில் இருக்கிறார்,'' என, மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் குற்றம் சாட்டினார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்ததாக கூறப்படும் 'பென் டிரைவ்' வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் பகிரங்கமானதும், ஏப்ரல் 26ல் ஓட்டுப்பதிவு நாளன்றே, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணை
பென் டிரைவ் தொடர்பாக விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. பிரஜ்வலுக்கு எதிராக சாட்சி கூறுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில், பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள பிரஜ்வலை கைது செய்ய, இன்டர்போல் உதவியை எஸ்.ஐ.டி., கோரியுள்ளது.
இதற்கிடையில் பிரஜ்வல், பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவுடன் தொடர்பில் இருப்பதாக, மைசூரு லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் திடீர் குண்டை வீசிஉள்ளார்.
ராம்நகர், பிடதியில் ஆசிரமம் நடத்திய நித்யானந்தா, பக்தி பெயரில் பல பெண்களை பலாத்காரம் செய்த வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு இன்னும், ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத அவர், வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.
ஆப்ரிக்காவின் ஏதோ ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவித்து அந்த நாட்டுக்கு, 'கைலாசா' என, பெயர் வைத்தார். தன் பக்தர்கள், சீடர்களுடன் ராஜபோகமாக வாழ்கிறார். அவ்வப்போது தன்னை பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.
இதே குற்றச்சாட்டை சுமந்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரஜ்வல், நித்யானந்தாவுடன் தொடர்பில் இருப்பதாக, மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் குற்றஞ்சாட்டியது, சர்ச்சைக்கு காரணமாகிஉள்ளது.
இதுகுறித்து, லட்சுமண் கூறியதாவது:
வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவுடன் பிரஜ்வல் தொடர்பில் இருக்கிறார். நித்யானந்தா வசிக்கும் நாட்டுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. இதற்காக பிரஜ்வல் தயாராகிறார்.
ஏன் வரவில்லை?
வெளிநாட்டில் இருந்து, பெங்களூருக்கு திரும்ப பிரஜ்வல் விமான டிக்கெட் வாங்கியதாக கூறுகின்றனர். அவர் ஏன் வரவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.