'பாலியல் பலாத்கார வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்' ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தல்
'பாலியல் பலாத்கார வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்' ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 01:30 AM

புதுடில்லி: “பாலியல் பலாத்கார வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாவது, நீதித் துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கிறது.
''இதுபோன்ற வழக்குகளை ஒத்திவைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்,” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில், இரண்டு நாட்கள் நடந்த மாவட்ட நீதித் துறை மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித் துறைக்கு பெரும் சவாலாக உள்ளன. குற்றங்கள் செய்தவர்கள் அச்சமின்றி வெளியே திரிகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் வருவதற்கு அஞ்சுகின்றனர்.
வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதால், ஏழைகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பலமுறை அலைக்கழிக்கப்படுவதால், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழக்கின்றனர்.
இந்த நிலையை மாற்ற அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளில், நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
பலாத்காரம் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில், நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு தலைமுறை கடந்த பின்பு வருவது, நீதித் துறையின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.