முதல் 'நமோ பாரத்' ரயில் குஜராத்தில் பிரதமர் துவக்கம்
முதல் 'நமோ பாரத்' ரயில் குஜராத்தில் பிரதமர் துவக்கம்
ADDED : செப் 17, 2024 02:16 AM

ஆமதாபாத்,
நாட்டின் முதல், 'நமோ பாரத் விரைவு ரயில்' சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் - ஆமதாபாத் இடையே, 'வந்தே மெட்ரோ' ரயில் சேவையை மத்திய அரசு அறிவித்தது. இதை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைப்பதற்கு சில மணி நேரம் முன், 'நமோ பாரத் விரைவு ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புஜ் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4:15 மணிக்கு புறப்பட்ட ரயிலை, ஆமதாபாதில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நகரங்களுக்குள் குறைந்த துாரம் இயக்கப்படும் ரயில் சேவை மெட்ரோ ரயில் என்றழைக்கப்படும் காரணத்தால், நகரங்களுக்கு இடையிலான நீண்ட துார ரயில் சேவையை வந்தே மெட்ரோ என்பதற்கு பதில், 'நமோ பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புஜ் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 10:50 மணிக்கு ஆமதாபாத் வந்தடையும். 360 கி.மீ., துாரத்தை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கிறது.
மீண்டும் ஆமதாபாதில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:20 மணிக்கு புஜ் சென்றடைகிறது.
இடையே ஒன்பது ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. கட்டணம் 455 ரூபாய். பொதுமக்களுக்கான சேவை, இன்று முதல் துவங்குகிறது.
வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், புஜ்ஜில் இருந்து சனிக்கிழமைகளிலும், ஆமதாபாதில் இருந்து ஞாயிறுகளிலும் இயக்கப்படாது.