ADDED : மார் 28, 2024 11:34 PM

ஹைதராபாத்: விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள, 'ஸ்கைரூட்' என்ற தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ள ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம்.
இந்த நிறுவனம், 2022 நவம்பரில் துணை சுற்றுப்பாதைக்கு இயக்கப்படும் ராக்கெட்டை செலுத்தியது.
துணை சுற்றுப் பாதையில் இயக்கப்படும் ராக்கெட், விண்வெளிக்கு சென்று திரும்பும்; ஆனால், பூமியை சுற்றி வராது.
தனியார் நிறுவனம் ஒன்று இந்த சோதனையில் ஈடுபட்டது, அதுவே முதல் முறையாகும்.
தற்போது அந்த நிறுவனம், கலாம் - 250 என்று பெயரிடப்பட்டுள்ள விக்ரம் - 1 வகை ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டின் சோதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த சோதனை முழு வெற்றி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, பூமியை சுற்றி வரக்கூடிய, விண்ணுக்கு செலுத்தப்படக் கூடிய முதல் இந்திய தனியார் நிறுவன தயாரிப்பு ராக்கெட்டாக இது விளங்கவுள்ளது.