ADDED : ஜூலை 20, 2024 06:33 AM
தட்சிண கன்னடா,: 'அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை' என, தட்சிண கன்னட மாவட்ட கல்வி அதிகாரி வெங்கடேஷ் சப்ரயா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில், அரசு பள்ளி வளாகத்திலோ, மைதானத்திலோ தனியார் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அரசு பள்ளியில் கடந்த 14ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குரு பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள், கல்வி துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மாவட்ட பொது கல்வி துறை துணை இயக்குனர் வெங்கடேஷ் சுப்ரயா, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், 'மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகள், பள்ளி மைதானம், வளாகங்களை எக்காரணம் கொண்டும், கல்வி சாரா பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
'இனி இந்த உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும்' என்று குறிப்பிட்டுஉள்ளார்.