ரிதாலா - நரேலா மெட்ரோ வழித்தடம் ஹரியானா வரை நீட்டிக்க திட்டம்
ரிதாலா - நரேலா மெட்ரோ வழித்தடம் ஹரியானா வரை நீட்டிக்க திட்டம்
ADDED : செப் 04, 2024 09:56 PM
விக்ரம் நகர்:“டில்லி மெட்ரோவின் ரிதாலா - நரேலா வழித்தடமானது, ஹரியானாவில் உள்ள குண்ட்லி - நாதுபூர் வரை நீட்டிக்கப்படும்,” என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார்.
டில்லி மெட்ரோ சேவை ஹரியானா வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு மாநில ஆம் ஆத்மி அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு டெண்டர் கோருவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு மாநில அரசு முறைப்படி அனுப்ப உள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தின் மொத்த நீளம் 23.73 கி.மீ., இதில் 2.72 கி.மீ., ஹரியானா மாநிலத்துக்குள் இருக்கும்.
இந்த நீட்டிப்பில் ரிதாலா மற்றும் நரேலா இடையே 19 நிலையங்களும், ஹரியானாவில் இரண்டு கூடுதல் நிலையங்களும் இருக்கும். இந்த திட்டத்திற்கு 6,230.99 கோடி ரூபாய் செலவாகும் என்றும் நான்கு ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.