ADDED : ஆக 27, 2024 04:41 AM
பெங்களூரு : பெங்களூரில் உள்ள 20 லட்சம் சொத்துகள் தொடர்பாக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன், தெளிவான தகவல் சேகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடு, வீடாக ஆய்வு செய்ய தயாராகிறது.
பெங்களூரு மாநகராட்சியின் வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் லட்சக்கணக்கான சொத்துகள், வரி கணக்கில் வரவில்லை. எனவே இவைகளிடம் வரி வசூலிக்க முடியவில்லை. இந்த சொத்துகளை அடையாளம் கண்டு, வரி கணக்கில் சேர்க்குமாறு, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடு, வீடாக சென்று சொத்துகள் குறித்து, தகவல் கேட்டறியப்படும்.
சொத்துகளின் போட்டோ, அடையாள எண், சொத்து இருக்கும் இடம் குறித்து, ஜி.பி,எஸ்., தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படும். ஆய்வு பணிக்கு 150 அதிகாரிகளுக்கு உதவ, 200 ஊழியர்கள் நியமிக்கப்படுவர். தகவல் சேகரிக்க தனி மொபைல் செயலி தயாராக உள்ளது. சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
சொத்து ஆய்வுக்காக வரும் அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்கும்படி சொத்து உரிமையாளர்களுக்கு, ஏற்கனவே எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடந்ததால், ஆய்வு பணி தாமதமானது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.
ஆய்வுக்கு வரும் ஊழியர்கள், சொத்துதாரர்களிடம் வரி செலுத்திய ரசீது, பெஸ்காமின் மின் கட்டண பில் மட்டும் கேட்பர். கிரய பத்திரம் உட்பட வேறு எந்த ஆவணங்களை கேட்க மாட்டார்கள். அனைத்து சொத்துகளின் தகவல் தெளிவாக தெரியும் என்பதால், வரி ஏய்ப்பை தவிர்க்கலாம்.
தற்போது எங்களிடம் சொத்துகளின் அடையாள எண்கள் மட்டுமே உள்ளன. இதை வைத்து சொத்துகளை தெளிவாக அடையாளம் காண முடியாது. இதனால், வரி வசூலில் பின்னடைவு ஏற்படுகிறது. ஆய்வுக்கு பின் சொத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாநகராட்சிக்கும் வரி வசூல் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

