தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காங்., மேலிட கட்டுப்பாடுகளுக்கு தெலுங்கானா முதல்வர் எதிர்ப்பு!அரசு விவகாரங்களில் தலையிடுவதால் அதிருப்தி

காங்., மேலிட கட்டுப்பாடுகளுக்கு தெலுங்கானா முதல்வர் எதிர்ப்பு!அரசு விவகாரங்களில் தலையிடுவதால் அதிருப்தி

காங்., மேலிட கட்டுப்பாடுகளுக்கு தெலுங்கானா முதல்வர் எதிர்ப்பு!அரசு விவகாரங்களில் தலையிடுவதால் அதிருப்தி


UPDATED : ஆக 08, 2026 05:28 PM

ADDED : ஆக 08, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 05:28 PM ADDED : ஆக 08, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

தெலுங்கானாவில், ஒருங்கிணைப்பு குழு மூலம் அரசு விவகாரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர காங்., மேலிடம் செய்யும் முயற்சிகளை, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக எதிர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து பிரிந்து, தெலுங்கானா என்ற மாநிலம், 2014ல் உருவானது. தொடர்ந்து இரு முறை தெலுங்கானாவின் முதல்வராக, பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், 72, பதவி வகித்தார்.

2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., அமோக வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக கருதப்பட்ட அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி, 56, முதல்வரானார். தன் அதிரடி நடவடிக்கைகள், திட்டங்கள், மேடை பேச்சுகளால் காங்., மேலிடத்தின் நற்பெயரை பெற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, தற்போது அதே மேலிடத்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் யாதகிரிகுட்டா என்ற பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நரசிம்ம சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக, பிரபல தெலுங்கு நடிகர் சீரஞ்சீவியின் மனைவி சுரேகாவை முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமித்தார்.

'இது குறித்து என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை' என, மாநில காங்., தலைவர் மகேஷ் குமார் கவுட் கட்சி மேலிடத்திடம் புகார் அளித்தார். மேலும், அறநிலையத் துறை அமைச்சர் கொண்டா சுரேகாவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தவிர, அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என, அமைச்சர்கள் சிலரும், காங்., மூத்த தலைவர்களும் குற்றஞ்சாட்டினர். இது, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான், டில்லியில், காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தலைமையில், கடந்த மாத இறுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தெலுங்கானா காங்., மேலிட பொறுப்பாளர் மீனாட்சி நடராஜனும் பங்கேற்றார். கூட்டத்தில், தெலுங்கானா அரசு மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது என, முடிவு செய்யப்பட்டது. தெலுங்கானா அரசில் நிலவும் குறைகளை களைவதற்காக, முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, மாநில காங்., தலைவர் மகேஷ் குமார் கவுட், மீனாட்சி நடராஜன் உட்பட எட்டு பேர் அடங்கிய மாநில ஒருங்கிணைப்பு குழுவை கட்சி மேலிடம் அமைத்தது.

மேலும், மூத்த அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைகளை ஆய்வு செய்யவும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கட்சி மேலிடம் தடை விதித்தது. அரசியல் சாராத நியமனங்களை மேற்கொள்வதிலும் அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்திலேயே நிரந்தரமாக தங்கி, கட்சியின் அன்றாட விவகாரங்களையும், சில சமயங்களில் அரசு விவகாரங்களையும் கவனிப்பதால், மீனாட்சி நடராஜன் மீது முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிருப்தி அடைந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த தன்னை, சுதந்திரமாக செயல்பட விடாமல் இப்படி கட்டுப்படுத்துவதா என, தனக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி நொந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியே போனால், 2028 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார முடியாது எனவும் புலம்பித் தள்ளினாராம். ஒருங்கிணைப்பு குழுவானது, ஒரு சூப்பர் அரசு போல் செயல்படக் கூடாது என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதற்கு முன், காங்., ஆண்ட பல்வேறு மாநில அரசுகளில் அதிகாரத்தை செலுத்திய கட்சி மேலிடம், அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்வியது. தெலுங்கானா விவகாரத்தை பார்த்தால், கடந்த கால தவறுகளில் இருந்து காங்., மேலிடம் பாடம் கற்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us