தேர்தல் கமிஷன் முன் போராட்டம் திரிணமுல் காங்., நிர்வாகிகள் கைது
தேர்தல் கமிஷன் முன் போராட்டம் திரிணமுல் காங்., நிர்வாகிகள் கைது
ADDED : ஏப் 09, 2024 12:50 AM

புதுடில்லி, மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் தலைமை பதவியில் இருப்பவர்களை மாற்றக்கோரி நேற்று டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகரில், 2022ல், ராஜ்குமார் மன்னா என்பவரது வீட்டில் குண்டு வெடித்தது. இதில், அவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், கடந்த 6ம் தேதி கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தின் நருபிலா கிராமத்தைச் சேர்ந்த மனோபிரதா ஜனா வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை, அப்பகுதி மக்கள் சேதப்படுத்தினர். இதில் என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பூபதி நகர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த மனாப் குமார் காராயா, சுபிர் மைத்தி, நபா குமார் போண்டா ஆகிய மூன்று நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ., அமைப்பு கடந்த வாரம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றின் தலைவர்களை மாற்றக்கோரி டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் டெரக் ஓ பிரையின் உள்ளிட்ட திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற திரிணமுல் காங்கிசாரை, குண்டுக்கட்டாக துாக்கிச் சென்ற போலீசார், கைது செய்தனர். இதில் திரிணமுல் நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர்.

