ADDED : ஆக 16, 2024 01:53 AM
முல்லை பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகவும், அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கோரியும் வண்டிப்பெரியாறு அருகே சப்பாத்தில், முல்லைப் பெரியாறு போராட்ட கமிட்டி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, கட்டப்பனையில் கிறிஸ்துவ இளைஞர் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவக்கினர். இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக விவசாயிகள் கூறியதாவது:
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஒருபுறம் கூறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இடுக்கி மாவட்டத்தில் கேரள அமைச்சர்களின் ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதை தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களை துாண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன, சில கேரள அமைப்புகள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

