ADDED : மே 29, 2024 05:36 AM

பெங்களூரு : காங்கிரஸ் அரசை கண்டித்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசை கண்டித்து மே 28ம் தேதி பெங்களூரில் போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., அறிவித்து இருந்தது.
மக்கள் தயார்
இதன்படி பெங்களூரு சுதந்திர பூங்காவில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது அசோக் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வரால் எதுவும் செய்ய முடியவில்லை.
பெங்களூரு சாலைகள் நிலைமை படுமோசமாக உள்ளன. துணை முதல்வர் சிவகுமார், 'பிராண்ட் பெங்களூரு உருவாக்குவோம்' என்றார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெங்களூரு வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை.
மாநில வரியில் 65 சதவீதம் பெங்களூரில் இருந்து வசூலிக்கப்படுகிறது. 'நமது வரி நமது உரிமை' என, முதல்வர் சித்தராமையா டில்லியில் போராட்டம் நடத்தினார். இப்போது கர்நாடக அரசுக்கு எதிராக பெங்களூரு மக்கள் போராட தயாராக உள்ளனர்.
மழைக்காலம் துவங்கும் முன்பே, பெங்களூரு சாலைகள் மோசம் அடைந்துள்ளன. குப்பை நிறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து குப்பை அள்ளுபவர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நாங்கள் இருக்கிறோம்
முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா: வெளியே செல்லவே மக்கள் பயன்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து துறைகளின் அதிகாரிகளும் மன அழுத்தத்தில் உள்ளனர். ஒரு அதிகாரி தற்கொலை செய்துள்ளார்.
அதிகாரிகள் பயத்துடன் வேலை செய்ய வேண்டாம். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
பெங்களூரு நகரில் சாலை பள்ளங்களை மூட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு சரியான பாதையில் பயணம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் அரசை திருத்தும் வேலையை, நாங்கள் செய்வோம்.
முன்னாள் அமைச்சர்கள் பைரதி பசவராஜ், கோபாலய்யா, முனிரத்னா,நாராயண கவுடா, எம்.எல்.ஏ.,க்கள் விஸ்வநாத், முனிராஜ், ரவி சுப்பிரமணியா, கிருஷ்ணப்பா, பெங்களூரு மத்திய மாவட்ட பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.