மியான்மர் எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு மிசோரம் கிராமங்களில் போராட்டம்
மியான்மர் எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு மிசோரம் கிராமங்களில் போராட்டம்
ADDED : மே 16, 2024 10:07 PM

அய்சால்: இந்தியா - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மிசோரம் மாநிலத்தில் நடந்த அமைதிப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பு
இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவது தொடர்கதையாக உள்ளது.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கும் மாநிலங்கள் மியான்மருடன், 1,643 கி.மீ., எல்லையை பகிர்கின்றன.
இந்த சூழலில், இந்திய - வங்கதேச எல்லையை போன்று, இந்திய - மியான்மர் எல்லையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
முதற்கட்டமாக, மணிப்பூரின் மோரே பகுதியில், 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இவ்வாறு வேலி அமைப்பதால், ஏற்கனவே அமலில் இருக்கும் இரு நாட்டு எல்லைகளில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் 16 கி.மீ., துாரம் பரஸ்பரம் பயணிக்கும் நடைமுறை தடைப்படும் எனக் கூறி, அங்குள்ள பழங்குடியின அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சம்பாய் மாவட்டத்தின் ஜோகாதார், வாபாய் கிராமங்களில் ஜோரோ அமைப்பினர் நேற்று அமைதி பேரணி நடத்தினர்.
அமைதி பேரணி
இதில் சின், கூகி, மிசோ, சோமி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜோகாதார் கிராமத்தில் நடந்த பேரணியில் 7,000 பேர் பங்கேற்றனர்.
அப்போது வேலி அமைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமைதிப் பேரணியை ஒட்டி இரு கிராமங்களிலும் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. மணிப்பூரின் டெக்னோபால் மாவட்டத்திலும் இதே போல் அமைதிப் பேரணி நடந்தது.