பிராமின் என்பதில் பெருமை சமூக தளத்தில் கலக்கும் பதிவு
பிராமின் என்பதில் பெருமை சமூக தளத்தில் கலக்கும் பதிவு
ADDED : ஆக 26, 2024 03:11 AM

பெங்களூரு: 'பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள்' என, பெங்களூரைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி கூறியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:
பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பிராமணர்கள் தங்களுடைய முழுப் பெயரைக் கூறுவதில்லை. பிராமணர்களை வில்லன்களாக, அரசியல்வாதிகளும், சில சமூக ஆர்வலர்களும் சித்தரிக்கின்றனர்.
பிராமணர்கள் அரசின் எந்த உதவியையும் பெறுவதில்லை. அவர்களுக்கு கிடைப்பதும் இல்லை. இட ஒதுக்கீடு, இலவசங்கள் பெறுவதில்லை. சொந்த உழைப்பில் உயர்ந்து வருவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அதனால், பிராமணர் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுங்கள்.
தலித், பழங்குடியினர், முஸ்லிம் என்று சொல்வதை பெருமையாக கருதும்போது, பிராமணர் என்று சொல்வதில் மட்டும் எதற்கு தயங்க வேண்டும். அரசியல்வாதிகளும், சமூக நீதியைக் காப்பாற்றுவதாக கூறுபவர்களும், பிராமணர்களை தவறாக சித்தரிக்கின்றனர்.
பிராமணர் என்று கூறிய உடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எத்தனை பேர் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் இருந்து யார் மதவாதிகள் என்பது தெரிகிறது. பிராமணர்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை. யாரையும் நசுக்கப் பார்ப்பதில்லை. பிராமணர் என்று சொல்வதில் பெருமை கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, 'பிராமின் ஜீன்' எனப்படும் பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளது. அனுராதா திவாரியின் பதிவுகளை, 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.