பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 18, 2024 06:27 AM

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டதால், காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய்; அன்னபாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; 200 யூனிட் இலவச மின்சாரம்; பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 உதவித்தொகை என ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. மாநில மக்கள் காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்தனர்.
ரூ.56,000 கோடி
இந்த ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நிறைவேற்ற ஆண்டுக்கு 56,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை திட்டம் தவிர, மற்ற நான்கு திட்டங்களையும் அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்த நான்கு திட்டங்களில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தில் மட்டும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. பெரும்பாலான பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை கிடைப்பதில்லை.
10 கிலோ அரிசி என்று கூறிவிட்டு தற்போது 5 கிலோ அரிசி தான் வழங்குகின்றனர். மீதம் 5 கிலோவுக்கு பணம் தருவதாக கூறினாலும், பெரும்பாலானோருக்கு பணம் கிடைப்பதில்லை. 200 யூனிட் கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
இந்த நான்கு வாக்குறுதிகளையும் சரியாக நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளன. தன்னை பொருளாதார நிபுணர் என்று கூறிக்கொள்ளும், முதல்வர் சித்தராமையா ஐந்து வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும், அரசிடம் பணம் இருப்பதாக கூறி வருகிறார்.
ஆனால், வாக்குறுதி திட்டங்கள் பெயரில் வளர்ச்சி பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
குறைந்தது வெற்றி
இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், வாக்குறுதி திட்டங்களை நிறுத்த வேண்டும்' என்று எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
அவர்கள் கூறியபடி, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசால் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. லோக்சபா தேர்தல் முடிந்ததும், பெட்ரோல், டீசலுக்கான விற்பனை வரியை உயர்த்தி, மாநில மக்களுக்கு அரசு 'ஷாக்' கொடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
லோக்சபா தேர்தலில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற கோபத்தில், பெட்ரோல் டீசல் விலையை அரசு உயர்த்தி இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
வாக்குறுதி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.பி., பாட்டீல் கூறியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, அரசுக்கு எதிராக அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.
சிலர் கூறுகையில், 'வாக்குறுதித் திட்டங்களை அறிவித்து தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் தான் எப்படியாவது வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பொதுமக்களின் மீது சுமையை ஏற்றுவது சரியல்ல' என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்- நமது நிருபர் --.