புற்றுநோய் பாதித்தவருக்கு செயற்கை மூட்டு; கோவை அரசு மருத்துவர்கள் சாதனை
புற்றுநோய் பாதித்தவருக்கு செயற்கை மூட்டு; கோவை அரசு மருத்துவர்கள் சாதனை
ADDED : ஆக 11, 2025 06:40 PM

கோவை: புற்றுநோய் காரணமாக, தோள்பட்டை அரிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்தவருக்கு, பிரத்யேக செயற்கை பந்து கிண்ண மூட்டு பொருத்தி கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் குணம் அடையச்செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மூக்கில்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். 57. ஒன்றரை மாதங்களாக இடது தோள்பட்டை வீக்கம் மற்றும் வலி காரணமாக கோவை அரசு மருத்துவ மருத்துவனையில் முடநீக்கியல் மற்றும் எலும்புமுறிவு அறுவை சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது இடது தோள்பட்டை பந்து கிண்ணமூட்டு முழுவதுமாக புற்று நோயால் அரிக்கப்பட்டிருந்தது ஆய்வுகளில் தெரியவந்தது. திசு பரிசோதனையில், 'அது ஸ்க்வாமஸ் செல் கார்சினோமா' என்னும் புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுக்குழாயில் இருந்து இடது தோள்பட்டை எலும்பிற்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அவருடைய இடது கையில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு சீரான நிலையில் இயங்குவதால் அவரின் இடது கையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.மருத்துவர் வெற்றிவேல் செழியன் தலைமையியான எலும்பு முறிவு நிபுணர்கள் முகுந்தன், விஜய் கிருஷ்ணன், ஹரிஹரன், அன்பு விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புக்குழு, அவருக்கு முதல்வரின் விரிவான மமுத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான உலோக மூட்டு பொருத்த முடிவு செய்தனர்.
ஜூலை 27 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி ரத்தக்குழாய் மற்றும் நரம்பு பாதிப்பு ஏதுமில்லாமல் நலமுடன் உள்ளார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இம்மாதிரியான தோள்பட்டை மூட்டு அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறை. இம்மாதிரியான அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் போது ரூ.3 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த சிகிச்சையை செய்து, நோயாளியை குணப்படுத்திய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி பாராட்டினார்.