ADDED : ஆக 12, 2024 07:23 AM

பெங்களூரு: ''தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது,'' என்று, பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் கூறி உள்ளார்.
பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் கோலாரில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவை, எதிர்க்கட்சிகள் குறி வைக்கவில்லை. முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., என, யாராக இருந்தாலும், தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். யார் ஊழல் செய்தாலும் தவறு தான். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய, அரசியலை பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க இல்லை. மக்கள் வரி பணத்தை தவறாக பயன்படுத்த கூடாது. எஸ்.ஐ.டி., - சி.ஐ.டி., - சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள், பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு, தண்டனை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசில் இருந்த போது, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் நாகராஜ். தற்போது அவருக்கு எதிராக பேசி வருகிறார்.

