அரவிந்த் கெஜ்ரிவால் பங்களாவில் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் பங்களாவில் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவு
ADDED : நவ 06, 2024 07:22 PM
சாணக்யாபுரி:அரவிந்த் கெஜ்ரிவால் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வந்த பிளாக்ஸ்டாப் சாலை பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மத்திய பொதுப்பணித்துறையை லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியின் முதல்வராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் அவர், தன் குடும்பத்தினருடன் பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார்.
அப்போது, விதிகளை மீறி அந்த பங்களா ஆடம்பரமாக புனரமைக்கப்பட்டதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கடந்த மாதம் 14ம் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்துஅவர் கூறியதாவது:
பிளாக்ஸ்டாப் சாலை பங்களாவை விதிகளை மீறி ஆம் ஆத்மி அரசு புனரமைத்தது. அந்த பங்களாவில் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய பொதுப்பணித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான வல்லுனர் குழுவினர், விரைவில் பங்களாவில் ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பர்.
பொதுப் பணத்தை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், ஊழலுக்காகவும் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் வரை, இந்த விஷயத்தைத் தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜேந்தர் குப்தாவின் கூற்றுக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.