வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஆக 08, 2025 08:49 PM

சென்னை; வறுமை இல்லாத மாநிலமாக., சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னையில் இன்று (ஆக.8) நடைபெற்ற சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசியதாவது;
அயோத்தியின் பெருமையை சொல்லும்போது கூட, காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். ராமனை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை.
நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான். அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான் என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால் என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு.
இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.