'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்
'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்
ADDED : ஆக 18, 2024 11:24 PM
பெங்களூரு : ரோட்டில் வீலிங் செய்து தொந்தரவு கொடுத்ததால், கோபமடைந்த மற்ற வாகன ஓட்டிகள், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல், மேம்பாலத்தில் இருந்து கீழே வீசினர்.
பெங்களூரின் மேம்பாலங்களில் இளைஞர்கள், இரு சக்கர வாகனங்களில் அபாயகரமாக வீலிங் செய்து, மற்ற வாகன பயணியருக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
வீலிங் செய்வோரை கட்டுப்படுத்த, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் வீலிங் செய்வது நிற்கவில்லை.
கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய ரோட்டில், நேற்று முன் தினம் வீலிங் செய்த 44 இளைஞர்கள், எலஹங்கா போலீசாரிடம் சிக்கினர். இவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை, பெங்களூரு - துமகூரு தேசிய நெடுஞ்சாலையின், அடகமாரனஹள்ளி மேம்பாலம் அருகில், வீலிங் செய்த இளைஞர் ஒருவர், அதே ரோட்டில் சென்ற வாகனம் மீது மோதினார். இதே ரோட்டில் வேறொரு இளைஞரும் வீலிங் செய்தபடி சென்றார்.
இதை கண்டு கோபமடைந்த வாகன ஓட்டிகள், வீலிங் செய்த இளைஞர்களின் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறித்து, மேம்பாலத்தில் இருந்து கீழே வீசினர்.
இந்த காட்சியை அவ்வழியாக சென்ற ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

