சபாநாயகரை சந்தித்தார் ராகுல் எமர்ஜென்சி பேச்சுக்கு எதிர்ப்பு
சபாநாயகரை சந்தித்தார் ராகுல் எமர்ஜென்சி பேச்சுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:56 AM
புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, எமர்ஜென்சி தொடர்பாக லோக்சபாவில் பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டார்.
லோக்சபா சபாநாயகராக, ஓம் பிர்லா நேற்று முன்தினம் பதவியேற்றார். அப்போது, 1975ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக அவர் பேசினார்.
இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் ராகுல், ஓம் பிர்லாவை நேற்று சந்தித்தார்.
அவருடன், சமாஜ்வாதி யின் தர்மேந்திர யாதவ், டிம்பிள் யாதவ், தி.மு.க., வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மிசா பார்தி, திரிணமுல் காங்.,கின் கல்யாண் பானர்ஜி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் பிரேமசந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது:
எதிர்க்கட்சித் தலைவராக ராகுலை நியமித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது, சபையை நடத்துவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
சபாநாயகராக பதவியேற்றபோது, எமர்ஜென்சி குறித்து ஓம் பிர்லா பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பானது என்பது தெரியபடுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக கட்சியின் சார்பில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, வேணுகோபால் தனியாக கடிதம் அனுப்பிஉள்ளார்.

