'சித்து - சிவகுமார் சண்டை மூட்டி விடுகிறார் ராகுல்'
'சித்து - சிவகுமார் சண்டை மூட்டி விடுகிறார் ராகுல்'
ADDED : ஏப் 29, 2024 06:43 AM

கொப்பால்: ''முதல்வர் நாற்காலிக்கு சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதை ராகுலே வளர்த்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு பின், சித்தராமையாவின் நாற்காலி கவிழும்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் ஆனேகுந்தியில் பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கவுடாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பிரசாரம் செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
மைசூரில் காங்கிரஸ் வேட்பாளர், 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகுமார், முதல்வராக வேண்டும் என்ற தனது கனவை, வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் கர்நாடகா வந்த ராகுல், சிவகுமாரை முதல்வர் என கூறினார். இதையெல்லாம் பார்க்கும் போது, முதல்வர் பதவிக்கு இருவருக்கும் இடையே, கட்சி மேலிடம் சண்டையை மூட்டி விட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் என்று பா.ஜ., தலைவர்கள் கூறவில்லை. ஜாதி, மதங்களுக்கு இடையே குழப்பத்தை உண்டாக்கி, மாநிலத்தில் காங்., ஆட்சியை பிடித்து உள்ளது. வளர்ச்சி பணிகளால் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும்.
உலகிற்கே இந்தியா குருவாக விளங்க வேண்டுமானால், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும்.
காங்கிரசுக்கு கலாசாரம் என்பதே கிடையாது. அமைச்சர் சிவராஜ் தங்கடகி, மோடியின் தலையில் அடிப்பேன் என்கிறார்.
தேவகவுடாவை 'சில்லறை' என்று சிவகுமார் விமர்சிக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், மோடி குறித்து பேசியது, அவரது கலாசாரம். ஹரிபிரசாத் செல்லாக்காசு. அவரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

