ADDED : மே 03, 2024 07:17 AM

ஷிவமொகா: ''பிரஜ்வலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். இதற்காக, பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக, நேற்று அக்கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் ஷிவமொகாவில் நடந்தது. காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி., ராகுல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், நடிகர் சிவராஜ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:
பா.ஜ., கூட்டணி அமைத்துள்ள ஹாசன் ம.ஜ.த., வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளார். இத்தகைய பெரிய குற்றம் செய்தவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். இதற்காக, பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, தன் பேரன் மீதான குற்றச்சாட்டை சுமந்துள்ளார். எங்கள் காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதற்காக சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.
வெறும் 33 வயது ம.ஜ.த., - எம்.பி., 400 பெண்களை பலாத்காரம் செய்தது சாதாரண குற்றமல்ல. இது பெரிய குற்றம். அதிகாரத்துக்காக பா.ஜ., யாருடனும் கூட்டணி அமைத்து கொள்ளும் என்பதற்கு அடையாளம். இனியும் அவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், ராய்ச்சூரில் ராகுல் பிரசாரம் செய்தார். முதல்வர், துணை முதல்வர், பாகல்கோட்டில் பிரசாரம் செய்தனர்.