ADDED : மே 05, 2024 05:50 AM
பெங்களூரு: ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்., - எம்.பி., ராகுல் நேற்று கடிதம்எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா நுாற்றுக்கணக்கான பெண்களை, பல ஆண்டுகளாக கொடூரமான முறையில் பாலியில் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
மகனாகவும், சகோதரனாகவும் பார்த்த பெண்களை மிகவும் கொடூரமான முறையில், அவர்களின் கண்ணியத்தை சூறையாடி உள்ளார். பிரஜ்வல் குறித்த விஷயத்தை, 2023 டிசம்பரிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தேவராஜே கவுடா தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பலாத்காரம் செய்தவருக்கு ஆதரவாக பிரதமர் பிரசாரம் செய்தார். மேலும், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல, பிரஜ்வலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்தகைய சூழலில், பிரதமர், உள்துறை அமைச்சரே ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது. என் 20 ஆண்டு கால பொது வாழ்க்கையில், பெண்களை இப்படி இழிவுப்படுத்தியதை பார்க்கவில்லை.
ஹரியானா, மணிப்பூரிலும் பெண்கள் மீது கொடுமை சம்பவங்கள் நடந்தன. குற்றவாளிகளுக்கு பிரதமர் ஆதரவாக இருந்தார். எனவே நம் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் ஆதரவாக காங்கிரஸ் செயல்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள்.
இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை நமக்கு உள்ளது.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.