பாஸ்போர்ட் அலுவலகங்களில் ரெய்டு: ரூ.1.59 கோடி சிக்கியது
பாஸ்போர்ட் அலுவலகங்களில் ரெய்டு: ரூ.1.59 கோடி சிக்கியது
ADDED : ஜூலை 03, 2024 01:03 AM
புதுடில்லி, மும்பை பாஸ்போர்ட் அலுவலகங்களில் லஞ்ச புகார்கள் எழுந்ததையடுத்து, சி.பி.ஐ., நடத்திய சோதனையில், 1.59 கோடி ரூபாய் சிக்கியது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாசிக் உட்பட பல்வேறு நகரங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு, பாஸ்போர்ட்டுகளுக்கு ஒப்புதல் அளிக்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், இதற்காக இடைத்தரகர்கள் வாயிலாக போலி ஆவணங்கள் தயாரிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் இணைந்து மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான லோயர் பாரெல், மலாத், நாசிக் ஆகிய பகுதிகளில் உள்ள பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்த இந்த சோதனையின் முடிவில், பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்ட போலி ஆவணங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 14 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதையும் உறுதிப்படுத்தினர்.
இதுதவிர இடைத்தரகர்களாக செயல்பட்ட 18 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், 1.59 கோடி ரூபாய் ரொக்கம், டிஜிட்டல் ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சி.பி.ஐ., செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தோம்.
'குறிப்பாக, அவர்களின் மொபைல் போன், வங்கி கணக்குகள், யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை சோதனைக்கு உட்படுத்தியதில், அந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.