ஐநா சபையில் பேசும்போது மைக் துண்டிப்பு: உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி
ஐநா சபையில் பேசும்போது மைக் துண்டிப்பு: உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி
UPDATED : செப் 23, 2025 10:10 PM
ADDED : செப் 23, 2025 10:06 PM

நியூயார்க்: ஐ.நா.,வில் பாலஸ்தீனம் பிரச்னை குறித்து உலக தலைவர்கள் பேசிய போது, 'மைக்'களில் ஏற்பட்ட பழுது, தொழில்நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட செயலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா., பொது சபையின், 80வது ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. இதில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தனர். மேலும், காசா மீதான போரை, மேற்காசிய நாடான இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, கூட்ட அரங்கில், தொடர்ச்சியாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால், உலக தலைவர்களின் பேச்சை கேட்க முடியாமல் பலர் தவித்தனர்.
குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன், காசாவில் நடப்பதை இஸ்ரேலின் இனப்படுகொலை என்றும், பாலஸ்தீனத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவரது மைக் துண்டிக்கப்பட்டது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், அவரது மைக் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்தோனேஷிய அதிபர் உள்ளிட்டோர் பேசும்போதும் இது போன்ற தடை ஏற்பட்டது. தொடர்ச்சியாக இவ்வாறு நடந்ததால் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பல்வேறு சந்தேகங்களும், யூகங்களும் ஏற்பட வழிவகுத்தது. ஆனால், மின்னணு சாதனங்களில் ஏற்பட்ட கோளாறே காரணம் என, ஐ.நா., சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.