ADDED : ஜூலை 17, 2024 01:18 AM
இஸ்லாமாபாத், கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால், 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முக்கிய நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கு நடுவில் உள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுவரை, புயலில் சிக்கி 40 பேர் உயிர்இழந்துள்ளனர் மற்றும் 347 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
நங்கர்ஹர் நகரில், 400 வீடுகள் சேதம் அடைந்துள்ளது மற்றும் 60 மின்கம்பங்கள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜலாலாபாத் நகரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சேதம் குறித்து மதிப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வடக்கு பாக்லான் மாகாணத்தில், காபூல் மற்றும் பால்க்கை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில், பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் காயம் அடைந்துள்ளனர். கனமழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக விபத்து நடந்ததா, இல்லை வேறு ஏதும் காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

