முதல்வர் 'சிடி' கூட வரலாம் ரமேஷ் ஜார்கிஹோளி 'பகீர்'
முதல்வர் 'சிடி' கூட வரலாம் ரமேஷ் ஜார்கிஹோளி 'பகீர்'
ADDED : மே 08, 2024 04:44 AM

பெலகாவி : ''வரும் நாட்களில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின், 'சிடி'க்களும் வெளியாகலாம். இது பற்றி நான் முன்பே கூறினேன்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
தற்போது ஒருவரின் 'சிடி' வெளியானது. வரும் நாட்களில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் 'சிடி'க்களும் வெளியாக வாய்ப்புள்ளது.
நேரடி தொடர்பு
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரின் ஆடியோ உள்ளது. என் வழக்கிலும் இவருக்கு நேரடி தொடர்புள்ளதற்கான சாட்சிகள் என்னிடம் உள்ளன. அவர் எனக்கு எதிராக சதி செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வந்தேன். ஆனால் அலட்சியப்படுத்தினர். இனியாவது இத்தகைய 'சிடி'க்களுக்கு, முதல்வரும், உள்துறை அமைச்சரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனக்கு எதிராக, சிவகுமார் சதி செய்தது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நான் ஊடகங்களில் வெளியிட மாட்டேன். வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தால், அவர்களிடம் ஆதாரங்களை ஒப்படைப்பேன். அரசு அமைத்த எஸ்.ஐ.டி., விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை.
என் வழக்கு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற இன்னாள் நீதிபதி மேற்பார்வையுடன் இருக்க வேண்டும். அந்த தலைவர் -- சிவகுமார் அதிக செல்வாக்கு உள்ளவர். பண பலம் படைத்தவர். அனைத்தையும் பணத்தால் வாங்க முடியும் என்ற அகங்காரம் அவருக்கு உள்ளது. சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நியாயமான விசாரணை வேண்டும்.
எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு பெருமைப்படும் விஷயம் அல்ல. அனைவரும் தலைகுனியும் செயலாகும். அவர் சட்டரீதியில் போராடட்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். சட்டத்துக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு 'சிடி'
பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல், விஜயபுராவில் நேற்று கூறியதாவது:
விரைவில் மற்றொரு, 'சிடி' வெளியாகும்; பெரும் சூறாவளியை கிளப்பும் என, ஏற்கனவே நான் கூறியிருந்தேன். ஆனால் யாருடையது என்பதை பகிரங்கப்படுத்தவில்லை. நான் கூறியது நிஜமானது. இதுபோன்று விரைவில் மற்றொரு 'சிடி' வெளிச்சத்துக்கு வரும்; பொறுத்திருங்கள்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதன் பின்னணியில், துணை முதல்வர் சிவகுமாரின் கைவரிசை உள்ளது. வக்கீலும், பா.ஜ., தலைவருமான தேவராஜே கவுடா குற்றம் சாட்டியது உண்மைதான். மாநில அரசு அமைத்துள்ள எஸ்.ஐ.டி., சிவகுமாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உத்தரவுப்படி எஸ்.ஐ.டி., பணியாற்றுகிறது.
பிரஜ்வலின் வழக்கு, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2019 லோக்சபா தேர்தலில், வட மாவட்டங்களில் நாங்கள் சிறந்த சாதனை செய்திருந்தோம். இப்பகுதிகளில் ம.ஜ.த.,வுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. எனவே பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

