'ராமேஸ்வரம் கபே' வழக்கில் குற்றப்பத்திரிகை பா.ஜ., ஆபீசை தகர்க்க திட்டமிட்டது அம்பலம்
'ராமேஸ்வரம் கபே' வழக்கில் குற்றப்பத்திரிகை பா.ஜ., ஆபீசை தகர்க்க திட்டமிட்டது அம்பலம்
ADDED : செப் 10, 2024 07:04 AM

பெங்களூரு: ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., தரப்பில் நான்கு பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட கடந்த ஜனவரி 22ம் தேதி, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த குந்தலஹள்ளியில் உள்ள 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், கடந்த மார்ச் 1ம் தேதி, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. முடிவில், முசாவீர் ஹுசேன் ஷாஜிப், அப்துல் மதீன் அகமது தாஹா, மாஜ் முனீர் அகமது, முஜாமில் ஹரீப் ஆகியோரை கைது செய்தது. அனைவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில், பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
மார்ச் 3ம் தேதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், வெவ்வேறு மாநில போலீசார் உதவியுடன் விசாரணை முடிக்கப்பட்டுஉள்ளது.
போலி ஆவணங்கள்
முசாவீர் ஹுசேன் ஷாஜிப் தான், குண்டு வெடிக்க செய்துள்ளார். இவருக்கு, அப்துல் மதீன் அகமது தாஹா உதவியுள்ளார். இவர், 2020ல் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளி.
இருவரும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த 42 நாட்களுக்கு பின், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஷிவமொகாவின் மாஜ் முனீர் அகமது, முஜாமில் ஹரீப், ஆகியோர் உதவியது கண்டறியப்பட்டது.
முசாவீர் ஹுசேன் ஷாஜிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இருவரும், 'டார்க் வெப்' இணையதளம் மூலம் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் போலி ஆவணங்களை பயன்படுத்தி, சிம்கார்டுகள் வாங்கி உள்ளனர்.
'கிரிப்டோ கரன்சி'
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சிலரை அப்துல் மதீன் அகமது தாஹா அறிமுகப்படுத்தி உள்ளார். 'கிரிப்டோ கரன்சி' மூலம் நிதி பரிமாற்றம் நடந்துள்ளது. டெலிகிராம் செயலி மூலம், தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தவும் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இதில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட 2023 ஜனவரி 22ம் தேதியன்று, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், அங்கு பலத்த பாதுகாப்பு இருந்ததால், அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வெடிப்பு நடத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.